பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு
1 min read
Iraq decides to lower the marriageable age of women to 9
13.11.2024
மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில் பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது. ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும், பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஈராக்கில் பெண்கள் குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசு ஈடுபட்டு வருகிறது.