டெல்லியில் 3-வது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசம்
1 min read
Air quality in Delhi is worst for 3rd day
15.11.2024
டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது.
இதனால் டெல்லியின் ஆனந்த் விஹார் , இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. மலைப் பகுதிகளில் பனிப் பொழிவு காரணமாக, டெல்லி குறைந்தபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் காலையிலும், மாலையிலும் பனிமூட்டம் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு காற்று மாசும் இணைந்துள்ளது.
3-வது நாளாக இன்றும் கடுமயான காற்று மாசு நிலவுகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின் படி, காற்றின் தரத்தை குறிக்கும் ஏகியூஐ குறியீட்டில் 409 என டெல்லியின் காற்று மாசை குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையை குறிக்கும். பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.