இந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. இணையதளம், மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்
1 min read
LIC website, which was in Hindi, has been switched back to English.
19.11.2024
இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தநிலையில், இன்று காலை முதல் அதன் இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் முழுக்க இந்திமயமானாதால், மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழலில் எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்து வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினை சரியாகி மீண்டும் ஆங்கிலத்தில் முகப்பு பக்கம் தெரியவரும் என்றும், இந்தி தவிர்த்து பிராந்திய மொழிகளில் எல்.ஐ.சி. இணையதளம் இயக்கவும் பணிகள் மேற்கொண்டு வருவதாக அதன் நிர்வாகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.