மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய தலைமை ஆசிரியர் கைது
1 min read
Headmaster arrested for double-meaning remarks to female students
1.12.2024
நாகை அருகே பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய தலைமையாசிரியர் மீது குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், நெம்மேலி சாலையை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 51). இவர் பாலக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமருகலை அடுத்த அம்பல் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு இடையில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழு பாலக்குறிச்சி பள்ளியில் மாணவிகளிடம் ஆலோசனை அளிக்க சென்றனர். அப்போது அங்கு பணியாற்றி இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் நீலமேகம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக மாணவிகள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் குழந்தைகள் நல அலுவலர் எழிலரசி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் நீலமேகம் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி, சப்- இன்ஸ்பெக்டர் திவ்யா மற்றும் போலீசார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகா முன்பு ஆஜர் படுத்தினர். நீதிபதி வருகிற 13 – ந் தேதி வரை நீலமேகத்தை மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.