அரசியலமைப்பு விவாதம் நடத்த எம்.பி.க்கள் ஒருமித்த கருத்து
1 min read
MPs unanimously agree to hold constitutional debate
2.12.2024
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இவ்வாறு தொடர் அமளி, இடையூறுகள் காரணமாக இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒரு வார கால முடக்கத்திற்கு பிறகு, அரசியலமைப்பு தொடர்பாக விவாதம் நடத்துவதில் இன்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, நாடாளுமன்றத்தை முடக்குவதை விடுத்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அரசியலமைப்பு தொடர்பாக அடுத்த வாரம் விவாதம் நடத்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, அரசியலமைப்பு தொடர்பாக டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் மக்களவையிலும், டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாநிலங்களவையிலும் விவாதம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல, நாளை முதல் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.