முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
1 min read
PM Modi speaks to Chief Minister M.K. Stalin over phone
3.12.2024
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதற்கிடையே, பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். தமிழகத்தில் தற்போதைய சூழல் எப்படி உள்ளது? மழை, வெள்ளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? விவசாய நிலங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பனவற்றை முதல்-அமைச்சரிடம் பிரதமர் தெளிவாக கேட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்.