July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

1 min read

Cabinet meeting approves lifting of state of emergency in South Korea

4.12.2024
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷியா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்பு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்பான்களை அமைத்தனர்.

எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே (இந்திய நேரப்படி அதிகாலை 1.15 மணி) உரையாற்றினார். அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.
அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.

இதற்கு முன், யூன் சுக்கின் அவசரநிலை அறிவிப்புக்கு அந்நாட்டின் மிக பெரிய, கொரியன் வர்த்தக யூனியன் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கொரியாவின் மிக பெரிய தொழிலாளர் அமைப்பான அதன் தலைவர் கிம் ஜின் யூக் கூறும்போது, சட்டவிரோத அவசரநிலை உத்தரவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் கூடியிருக்கிறோம். அதிபருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்த முட்டாள்தன செயலை அவர் செய்கிறார் என என்னால் நம்பவே முடியவில்லை என கூறினார். இந்த சூழலில், அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், அவசரநிலை அறிவிப்பை அதிபர் யூன் சுக் இயோல், முழுமையாக நீக்கும் வரை இந்த நிலையே தொடரும் என அந்நாட்டின் அரசியல் வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தென் கொரியாவின் அதிபரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.