சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
1 min read
Water inflow to Sathanur Dam increases again
4.12.2024
பெஞ்ஜல் புயல் காரணமாக திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் அணைக்கு வரத் தொடங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி 118.95 அடி நீரை தேக்கி வைத்து அணைக்கு வந்த மொத்த உபரிநீரையும் அதாவது ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரையும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றினர். இதனால் தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்கள், வீடுகள் நீரில் மூழ்கியதோடு 40 அடி உயர மேம்பாலமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து குறைந்து 68,000 கனஅடி அளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்தானது 18,000 கன அடியில் இருந்து 23,800 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 118 அடி வரை நீர் நிரம்பியுள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது; இதனால் கரையோர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
முன்னதாக அங்கு 24 மணி நேர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.