டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட மத்திய அரசு பரிசீலனை – அண்ணாமலை தகவல்
1 min read
Central government considering dropping decision to set up tungsten mine – Annamalai News
9.12.2024
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி கிஷன் ரெட்டிக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து தி.மு.க. அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, தி.மு.க. அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.