அமெரிக்க நீதித் துறையில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி
1 min read
Indian-origin woman gets key position in US Justice Department
10.12.2024
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீலான ஹர்மீத் கே தில்லானை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பதிவில் கூறும்போது, அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே. தில்லானை பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் தனது வாழ்க்கை முழுவதும், நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து நிலைத்து நிற்கிறார். ஹர்மீத் நாட்டின் முன்னணி தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர். தனது புதிய பாத்திரத்தில், ஹர்மீத் நமது அரசியலமைப்பு உரிமைகளின் அயராத பாதுகாவலராக இருப்பார்.
குடிமை உரிமைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை நேர்மையாகவும் உறுதியாகவும் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார்.
டிரம்பின் புதிய அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்ட 4-வது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்மீத் தில்லான் ஆவார்.