வங்காளதேசத்தில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் கைது
1 min read
4 arrested for vandalizing Hindu temple in Bangladesh
16.12.2024
வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அன்று முதல் இந்தியா-வங்காளதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல், இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை கண்டித்து இந்தியாவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், சுனம்கஞ்ச் மாவட்டம் தோராபஜாரில் இந்து கோவில் மற்றும் இந்துக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் ஆலிம் உசைன் (வயது 19), சுல்தான் அகமது ராஜு (வயது28), இம்ரான் உசைன் (வயது 31), ஷாஜகான் உசைன் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகாஸ் தாஸ் என்பவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு வன்முறையை தூண்டியதாகவும், அந்த பதிவை நீக்கியபின்னரும் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலானதால் வன்முறை வெடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தோராபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ்தாசை கைது செய்தனர். ஆனால் ஒரு குழுவினர் அவரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்து கடத்திச் செல்ல தயாராக இருந்தது. எனவே, ஆகாஸ் தாசின் பாதுகாப்பு கருதி அவரை சதார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.