ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்; ஆதரவு-269, எதிர்ப்பு-198
1 min read
One Nation One Election Bill introduced in Lok Sabha; 269 in favour, 198 against
17.12.2024
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்த குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை, மத்திய மந்திரி சபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்று கொண்டது. இதன் தொடர்ச்சியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி அரசியல் சாசன (129-வது திருத்த) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்திலேயே இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என குறிப்பிட்டனர்.
அதைத்தொடர்ந்து மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான தீர்மானம் ஒன்றை மேக்வால் கொண்டு வந்தார். மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 269 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனினும், 198 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்து மேக்வால் பேசும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவை கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த மசோதா, அரசியல் சாசனத்தின் 360 (ஏ) சட்டப்பிரிவை மீறுகிறது என கூறுகின்றனர். அரசியல் சாசனத்திலுள்ள சட்டப்பிரிவு 360 (ஏ)-வானது, திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமன்றத்திற்கு அதிகாரமளிக்கின்றது என்றார்.
சட்டப்பிரிவு 327-ஐ பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், இந்த பிரிவானது, விதான் சபை அல்லது சட்டசபை தேர்தல்களில் திருத்தங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கிறது என்று தெரிவித்தார்.