July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பெரியார் விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு

1 min read

Periyar issue: Annamalai supports Seeman

9.1.2025
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 15 நாட்களாக தி.மு.க வின் அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று தெரியும். குறிப்பாக அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க வை சேர்ந்தவர் இல்லை என்று முதலில் சொன்னார்கள். ஆனால் தற்போது உண்மையை சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் தி.மு.கவின் ஆதரவாளர் என்று முதல்-அமைச்சரே சொல்லிவிட்டார். திருப்பூரில் நடந்த கொலை சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்தில் ஒரு மூத்த அமைச்சரை அனுப்பி பேச வைத்து இருக்க வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்திற்கு முதல்-அமைச்சர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
யுஜிசி குறித்து முதல்-அமைச்சர் உயர்கல்வி துறை செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

பிப்ரவரி 5 -ம் தேதி வரை கருத்து சொல்ல அனுமதி இருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் செனட் உறுப்பினர்கள் மாநில அரசு சார்பில் இருக்கிறார்களே. இதை வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. சட்டசபையை பார்க்கும் போது வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில் உள்ளது போல் முதல்-அமைச்சரை புகழ்வது தெரிகிறது. வடிவேலுவின் இடத்தை செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டார். பெரியார் விவகாரம் தொடர்பாக சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நாங்கள் தருகிறோம். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை தற்போது பேசினால் அருவருப்பு ஏற்படும். அவர் பேசியதை பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த மூவர் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யாததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் கொடுவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது;-

“தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் தேர்வுகள் நடத்தப்படவில்லை. காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையினரின் எண்ணிக்கை பற்றாக்குறையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணிகளில்தான் காவல்துறையினர் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு, வேலை செய் என்றால் எப்படி செய்ய முடியும்? காவல்துறைக்கு தயவுசெய்து அதிகாரம் கொடுங்கள்.
பல்லடம் மூவர் படுகொலை வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். மூவர் படுகொலை வழக்கில் நீதி கொடுக்கவில்லை என்றால் பொது வாழ்வில் இருந்து என்ன பயன்? மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியாது. சிபிஐ விசாரணை கோரி 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று விரைவில் கவர்னரை சந்திப்போம்.”
இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும், எனவும், நிதிச்சுமையை காரணமாக தமிழக அரசு கூறக்கூடாது என கூறினார். மேலும், தமிழக அரசு மனது வைத்தால் 2 நாட்களில் மக்களுக்கு ரூ.1,000 வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.