காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
1 min read
Supreme Court refuses to stay Cauvery-Kundaru river interlinking project
20.1.2025
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் உள்பட காவிரி ஆற்றில் நிறைவேற்றப்படும் நீர் பாசன திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
கர்நாடக அரசு மனுவில், காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை விட கூடுதலாக நீரை எடுத்துக் கொள்ள உரிமையே கிடையாது என கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மூலமாக தமிழகத்திற்கு கூடுதலாக 45 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றும், அது கர்நாடகாவில் தண்ணீர் பிரச்சனையை ஏற்படுத்தலாம் எனவும் மனுவில் கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. ஆகவே, காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கர்நாடகா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே எந்தவிதமான நீர்பாசன திட்டங்களையும் செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், குமாரமங்கலம் – ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு, நாகை, தஞ்சை, நாமக்கல், முசிறி, சீர்காழி போன்ற இடங்களில் தடுப்பணைகள் கட்டும் திட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தடை விதிக்க முடியாது என்று கூறி, இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.