தாயின் சிகிச்சைக்காக சைஃப் அலி கான் வீட்டில் திருட முயன்றதாக கைதி வாக்குமூலம்
1 min read
Prisoner confesses to trying to steal from Saif Ali Khan’s house for his mother’s treatment
22.1.2025
மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்தினார்.
பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு கை மற்றும் கழுத்தில் கட்டுகளுடன் அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் 70 மணி நேரத்துக்கு பிறகு பிடிபட்டார். அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும், வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சட்ட விரோதமாக பல்வேறு பெயர்களில் தங்கி இருந்த அவரை மும்பை அருகே உள்ள தானேவில் போலீசார் கைது செய்தனர்.
5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நடிகர் சைஃப் அலி கான் குடியிருக்கும் கட்டிடத்தில் இருந்த பாதுகாவலர்கள் இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஷரிபுல் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். சத்தம் வராமல் இருக்க தனது காலணிகளை கழற்றி பையில் வைத்துள்ளார். தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். கட்டிடத்தின் நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளை முயற்சியில் அவர் நுழைந்துள்ளார்.
வீட்டில் இருந்த பணியாளர்கள் அவரை பார்த்து சத்தம் போட்டனர். இதைக் கேட்டு அங்கு வந்த சைஃப் அலி கான் கொள்ளையனை தடுக்க முயன்றார். அப்போது சைஃப் அலி கானை அவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பைக்கு வந்துள்ளார். தன் பெயரிலேயே ஆதார் அட்டை பெற பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தொழிலாளர் ஒப்பந்ததாரரான அமித் பாண்டே என்பவரின் உதவியோடு ஷரிபுல் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ஷரிபுல் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாயார் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் அவர் திருடுவதற்காக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். ஒரு பணக்கார வீட்டில் கொள்ளையடித்து விட்டு வங்காள தேசம் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார்.
சைஃப் அலி கான் வீடு என்று தெரியாமல்தான் அவர் அங்கு நுழைந்துள்ளார். கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தானேயில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு ஒர்லியில் இருக்கும் உணவகத்தில் மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளத்திற்கு பணிபுரிந்தார். அதில் ரூ.12 ஆயிரத்தை தாயின் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவர் திருடியதால் வேலையை இழந்தார். தானேயில் ஒரு வீட்டு பராமரிப்பு வேலையில் சேர்ந்தார். கடந்த மாதம் 15-ந் தேதி அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததால் அந்த வேலையும் இல்லை. அவர் கிட்டதட்ட கையில் பணம் இல்லாமல் இருந்தார்.
மேற்கண்டவாறு ஷரிபுல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.