டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்
1 min read
Case seeking surveillance of delivery people: Notice to DGP
23.1.2025
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை. பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது. சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், உணவு டெலிவரி நிறுவன சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்கும்படி, தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டி.ஜி.பி.க்கும், ஸ்விக்கி, சொமேட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.