தொழில் அதிபருக்கு சிறையில் வி.ஐ.பி. வசதிகள்: டி.ஐ.ஜி. உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
1 min read
VIP facilities for industrialist in jail: DIG, 2 others suspended
23/1/2025
எர்ணாகுளம் காக்கநாடு மாவட்ட சிறையில் பிரபல தொழில் அதிபர் பாபி செம்மன்னூர் சிறப்பு சலுகைகளை பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய்குமார், சிறை சூப்பிரண்டு ராஜு ஆபிரகாம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.
சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் ஜெனரல் பால்ராம் குமார் உபாத்யாயின் உத்தரவின் பேரில், சிறைத்துறை டி.ஐ.ஜி. (தலைமையகம்) வினோத்குமார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காக்கநாடு சிறையில் இருந்தபோது, சிறைத்துறை சூப்பிரண்டு அலுவலக அறையில் வைத்து, பாபி செம்மன்னூர் மற்றும் அவரது 3 நண்பர்கள் சூப்பிரண்டை சந்தித்து உள்ளனர். சிறைத்துறை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் அந்த சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் தொழில் அதிபரை செல்போனில் பேச அனுமதித்தது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க டி.ஐ.ஜி. ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
பாபிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் நாட்குறிப்பு மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சிறையில் பாபியை சந்தித்ததாக ஒப்புக்கொண்ட டி.ஐ.ஜி. அஜயகுமார், தொழிலதிபருக்கு எந்த சிறப்பு கவனமும் செலுத்தப்படவில்லை.
முன்னதாக மலையாள பிரபல நடிகை ஹனிரோஸ். பாபி செம்மன்னூர் மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டு தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபி செம்மன்னூரை கைது செய்து எர்ணாகுளம் ஜுடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் தொழில் அதிபரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து பாபி செம்மன்னூர் காக்கநாடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 14-ந் தேதி அவருக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் விடுதலையை ஒரு நாள் ஒத்திவைக்க முடிவு செய்தார். விடுதலை பெறுவதில் சிரமம் உள்ள ரிமாண்ட் கைதிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக சிறையில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.