அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
Coming to Aritapatti: Chief Minister M.K. Stalin’s post
25.1.2025
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாப்பட்டி பகுதியில் 4,981.64 ஏக்கர் நிலத்தில் ‘டங்ஸ்டன்’ கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் மாதம் உரிமம் வழங்கப்பட்டது. மாநில அரசு கேட்டுக்கொண்டதால்தால் மத்திய அரசு அனுமதி அளித்தது என்று பாஜக கூறியது. இந்த விசயத்தில் மாநில அரசு மீது அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது.
இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். 50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசு, அ.தி.மு.க. மற்றும் பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
கடந்த 9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில், ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மீண்டும் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், ‘டங்ஸ்டன்’ திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரிட்டாப்பட்டியில் நாளை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கு வருகை தருமாறும் முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.