July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min read

21 Social Justice Fighters’ Manimandapam: MK Stalin inaugurated

28.1.1025
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கி கையசைத்தவாறும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
இந்த நிலையில், இன்று 2-ம் நாள் கள ஆய்வில் விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஏ.கோவிந்தசாமியின் வெண்கல சிலைக்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவு அரங்கம், மணிமண்டபத்தை பார்வையிட்டார். இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவை முடித்துக்கொண்டு இன்று மதியமே அவர், சென்னைக்கு சென்றார்..

முன்னதாக

விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

“இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம். விழுப்புரத்தின் பெருமைகளை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். திராவிட இயக்கத்தின் தலைமகனாக திகழ்ந்தவர் மறைந்த கோவிந்தசாமி. அவரது நினைவிடத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த பெருமை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியவர் கருணாநிதி. இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது 2 லட்சம் பேர் மீதான வழக்கை திரும்பப்பெற்றது திமுக அரசு. 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன். சமூக நீதியை நிலைநாட்டவே திமுக தோன்றியது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். கேலியனூர் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். செஞ்சி, மரக்காணத்தில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தளவானூர் அணைக்கட்டு ரூ.84 கோடியில் சீரமைக்கப்படும். திருவாமத்தூர் கோவிலில் திருமண மண்டபம் கட்டப்படும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். நிதி இல்லை, நிதி இல்லை என புலம்பாமல் மக்களின் குறைகளை நீக்கும் அரசாக செயல்பட்டு வருகிறோம். சில எதிர்க்கட்சித்தலைவகள் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது ஆட்சியின் மீதான குறை அல்ல. அவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறை. அவர்கள், தானும் நல்லது செய்யமாட்டார்கள்.. பிறரையும் நல்லது செய்ய விடமாட்டார்கள். பிறர் நல்லது செய்தால் எதிர்கட்சித்தலைவருக்கு பிடிக்காது.

நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு. என்னை முன்னிலைப்படுத்த நான் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தை முன்னிலைப்படுத்தவே உழைக்கிறேன். இது ஸ்டாலின் ஆட்சி எனச்சொல்லி பெருமை தேடிக்கொள்ள விரும்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பதையே நான் கூறுகிறேன். திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்திகள் இங்கு தலைதூக்க முடிவதில்லை. “

இவ்வாறு அவர் பேசினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.