இந்திய டெலிகாம் துறையில் நுழையும் எலான் மஸ்க்
1 min read
Elon Musk to enter Indian telecom sector
29.1.2025
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது.
அதன்படி பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இன்னும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.
ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.