ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Karnataka High Court orders handover of Jayalalithaa’s belongings
29.1.2025
கடந்த 1991-96-ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்தபோது, ஜெயலலிதா காலமானார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.
இதனிடையே ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த உத்தரவில், “27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து செல்ல வேண்டும்.
பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்ரவரி 14, 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா கோர்ட்டு நீதிபதி எச்.வி. மோகன் உத்தரவிட்டார்.