சென்னை மெட்ரோ ரெயில் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
1 min read
Chennai Metro Rail Project: Chief Minister M.K. Stalin inspects
13/2/2025
கருணாநிதி தலைமையிலான அரசால் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–1ன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
வழித்தடம் 3-ல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் – தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.
பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்திற்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜுன் 2023-ல் சுரங்கம் தோண்டும் பணிகளை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1,218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளி வந்தது.
செப்டம்பர் 2024-ல் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. இந்த முக்கியமான பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. கோபால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.