கேரள திருவிழாக்களில் இயந்திர யானைகளை பயன்படுத்த நடவடிக்கை
1 min read
Kerala to use mechanical elephants in festivals
18.2.2025
கேரளாவில் கோவில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில், சாமி சிலையை சுமந்து செல்ல மற்றும் ஊர்வலத்திற்கு என வன விலங்கான யானைகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சமீப நாட்களாக கேரளாவில் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்ற யானைகள் திடீரென மிரண்டு ஓடின. சுற்றியிருந்தவர்களை தாக்கின.
கடந்த 10 நாட்களில் நடந்த சம்பவங்களில் 5 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவிலின் சொத்துகளும் சேதமடைந்தன. கேரளாவின் கோயிலாண்டி பகுதியில் திருவிழாவில் யானை மிரண்டு, ஓடியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் கோவிலில் இருந்த அலுவலகம் ஒன்றும் சேதமடைந்தது. 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திருவிழாவின்போது, பட்டாசு வெடித்த சத்தம் கேட்டதும் யானைகள் மிரண்டு, ஓடியுள்ளன என கூறப்படுகிறது
இதேபோன்று கேரளாவில் மற்றொரு சம்பவத்தில் திரிச்சூரில் மசூதி ஒன்றில் நடந்த திருவிழாவில் பங்கேற்ற யானை மிரண்டதில் ஒருவரை குத்தி கொன்றுள்ளது. மற்றொரு சம்பவத்தில், பாலக்காட்டில் பாகன் ஒருவரை யானை மிதித்து கொன்றது. கடைகள் மற்றும் வாகனங்களையும் சூறையாடியது.
கடந்த ஜனவரியில் மலப்புரம் பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் பலியானார். 17 பேர் காயமடைந்தனர். கேரளாவில் ஆண்டுதோறும், யானைகளின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இதேபோன்று, கூட்டத்துக்குள் புகுந்து அமளி ஏற்படுத்தி, மக்களை அச்சமடைய செய்வது மற்றும் திருவிழா காலங்களில் யானை கிணற்றில் விழுந்து விடும் சம்பவங்களும் நடந்துள்ளன. யானையால் மக்களுக்கு அச்சுறுத்தல், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதுடன், யானைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் யானைகளை பயன்படுத்தும்போது, அதிக சத்தம், போக்குவரத்து, பட்டாசு வெடித்தல் மற்றும் பிற நடவடிக்கைகளால் அவை உடல் ரீதியாகவும் மற்றும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இதேபோன்று, சங்கிலியால் பிணைக்கப்படுதல் மற்றும் அடித்து துன்புறுத்துதல் போன்ற வலியேற்படுத்தும் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முற்படும்போது, இந்த விலங்குகள் கடுமையாக அதிருப்தியடைகின்றன.
இந்த சூழலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை பீட்டா இந்திய அமைப்பு மேற்கொண்டு உள்ளது. யானைகளால் பாதிக்கப்பட்ட கோவில்கள், தேவஸ்வம் வாரியம் மற்றும் மசூதிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.
அதில், உயிருள்ள யானைகளை போன்று காணப்படும் இயந்திர யானைகளை வழங்கி உதவ முன்வந்துள்ளது. இவை உருவத்தில் உண்மையான யானைகளை போன்றே காணப்படும். அவை 3 மீட்டர் உயரத்துடன், 800 கிலோ எடை கொண்டிருக்கும். ரப்பர், உலோகம், நுரை மற்றும் ஸ்டீல் போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் இந்த யானைகளை இயக்க 5 இயந்திரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
அது தலையை ஆட்டும். காதுகள் மற்றும் கண்களை அசைக்கும். வாலை சுழற்றும். துதிக்கையை உயர தூக்கும். தண்ணீர் தெளிக்கவும் கூட செய்யும். மக்கள் அதன் மேல் ஏறி அமரலாம். அதற்கு வசதியாக, அந்த யானையின் முதுகில் சீட் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த யானைகளின் கால்கள் பகுதியில் சக்கரங்கள் இணைக்கப்பட்டு இருக்கும். அதன் உதவியுடன் இந்த யானைகளை, சடங்குகள் மற்றும் பேரணிகளில் அவற்றை நகர்த்தி கொண்டு செல்ல முடியும்.
அதனால், உண்மையான யானையை போன்று இந்த யானைகளை பயன்படுத்த முடியும் என்று பீட்டா இந்திய அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இதுவரை 13 இயந்திர யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள கோவில்களுக்கு 8 இயந்திர யானைகளை பீட்டா இந்திய அமைப்பு நன்கொடையாக வழங்கியுள்ளது.
உண்மையான யானைகளின் பயன்பாட்டை நிறுத்தும் அவர்களுடைய முடிவுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் இவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனால், கோவில் திருவிழாக்களில் இந்த இயந்திர யானைகள் பாதுகாப்பான மற்றும் கொடூர முறையில் இல்லாத வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், உண்மையான யானைகள் வனப்பகுதியில் அவற்றின் குடும்பத்துடன் வசிக்க வழிவகை ஏற்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு முதல் பீட்டா இந்திய அமைப்பு, இயக்கம் ஒன்றை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதன்படி, உண்மையான யானைகளுக்கு பதில் இயந்திர யானைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த காரணங்களால், இயந்திர யானைகளின் மவுசும் கூடி வருகிறது. மக்களும் அதனை வரவேற்க தொடங்கி இருக்கின்றனர்.