July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

712 குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min read

712 residential allotment orders issued by Chief Minister M.K. Stalin

19.2.2025
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.2.2025) சென்னை, டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசால் பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று முதல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 5059.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 மாவட்டங்களில் 131 இடங்களில் 44,609 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு, 55,898 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் சமயத்தில் அங்குள்ள குடும்பங்கள் சில மாதங்களுக்கு வேறு இடங்களில் தங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்திற்கான மறுகுடியமர்வு கருணைத் தொகை ரூ.8000/-த்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.24,000 என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 10,081 குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக 23.96 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகளையும், சத்தியவாணி முத்துநகர் திட்டப்பகுதியில் 438 அடுக்குமாடி குடியிருப்புகளையும், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராதா கிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் 168 அடுக்குமாடி குடியிருப்புகளையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 29.10.2024 அன்று திறந்து வைத்தார். இதில் மறுகட்டுமான பயனாளிகளான சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் 160 குடியிருப்புதாரர்களுக்கும், சத்தியவாணி முத்துநகர் திட்டப்பகுதியில் 384 குடியிருப்புதாரர்களுக்கும் மற்றும் ராதாகிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் 168

குடியிருப்புதாரர்களுக்கும், என மொத்தம் 712 மறுகட்டுமான குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.

ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு, சந்திரயோகி சமாதி திட்டப்பகுதி மறுகட்டுமான பயனாளி பங்களிப்பு தொகையான 83 ஆயிரம் ரூபாயினை, 20 வருட மாதத் தவனையில் எளிய முறையில் பங்களிப்பு தொகை செலுத்த ரூ.500 என்று நிர்ணயம் செய்தும், ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப்பகுதிகளின் மறுகட்டுமான பயனாளி பங்களிப்பு தொகையான 1.50 லட்சம் ரூபாயினை 20 வருட மாதத் தவணையில் எளிய முறையில் பங்களிப்பு தொகை செலுத்த ரூ.625 என்று நிர்ணயம் செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் எஸ்.பிரபாகர், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.