July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ உருவாக்கிய கேரள டாக்டர்

1 min read

Kerala doctor creates ‘Bluetooth stethoscope’

20.2.2025
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான உபகரணம் ‘ஸ்டெதஸ்கோப்’. இதனை பயன்படுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் இதயத்துடிப்பு, நுரையீரல், இரைப்பை, குடல், கருப்பை ஆகியவற்றில் ஏற்படும் ஒலிகள் உள்ளிட்டவைகளை கேட்க முடியும்.
அதனை வைத்து தான் நோயாளியின் உடல் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் கண்டு பிடித்து சிகிச்சையை தொடங்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த ஸ்டெதஸ்கோப்பை பணியில் இருக்கும் போது மருத்துவர்கள் எப்போதும் தங்களுடன் வைத்திருப்பர்.
இதனால் டாக்டருக்கான அடையாளமாக ‘ஸ்டெதஸ் கோப்’ இருந்து வருகிறது.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியிருக்கிறார். கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் மன்னுத்தி வளாகத்தில் உள்ள கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்லூரியின் டாக்டர் ஜான் ஆபிரகாம் தான் அதனை உருவாக்கி உள்ளார்.

இந்த ஸ்டெதஸ்கோப் இரண்டு தனித்தனி பாகங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று நோயாளியின் உடலிலும், மற்றொன்று மருத்துவரின் காதுகளிலும் வைக்கப்படும். நோயாளியின் உடலில் இருந்து உருவாகும் சத்தம், டாக்டருக்கு அவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி வழியாக கேட்கிறது.
இதன் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும். இதனால் நோயாளி மற்றும் மருத்துவருக்கு இடையேயான நேரடி உடல் தொடர்பை குறைக்கிறது. நோயாளியின் இதய துடிப்பு, நுரையீரல் ஒலிகள் மற்றும் பிற சத்தங்களை தூரத்தில் இருந்தே மருத்துவர் கேட்க முடியும்.

மேலும் பாரம்பரிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒப்பிடுகையில், இந்த ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ விலை குறைவாகும். பாரம்பரிய ‘ஸ்டெதஸ்கோப்’ விலை பொதுவாக ரூ.8ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ விலை ரூ.5ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
காட்டு விலங்குகள் மற்றும் ஆபத்தான விலங்குகளுடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உடல் ரீதியான தொடர்பு இல்லாத காரணத்தால் விலங்குகள் தாக்கும் அபாயம் மற்றும் தொற்று நோய்கள் பரவல் உள்ளிட்ட நேரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மேலும் அவர் இதற்கு முன்பு கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.