மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் கைது
1 min read
17 terrorists arrested in Manipur during security forces’ search operation
21/2/2025
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த 9-ஆம் தேதி ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் பாஜக எம்எல்ஏக்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் கியாம் லெய்காய் பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில், தடைசெய்யப்பட்ட காங்லே யவோல் கண்ணா லூப் (KYKL) அமைப்பைச் சேர்ந்த 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து மொத்தம் 27 தோட்டாக்கள், மூன்று வாக்கி-டாக்கி பெட்டிகள், உருமறைப்பு சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக இம்பாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த (P) ஒரு பயங்கரவாதியை இம்பால் கிழக்கு மாவட்டத்தின் நகாரியன் சிங் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நைகோங் குல்லன் பகுதியில் இருந்து காங்லேபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நகர மெய்ட்டே)-ஐச் சேர்ந்த ஒருவரும், கக்சிங் மாவட்டத்தில் உள்ள கக்சிங் சுமக் லெய்காய் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட காங்லேய் யாவோல் கண்ணா லுப் (KYKL) அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியும், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பீடிங்காவில் இருந்து KCP கேசிபி (PWG)அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினரால் கைது செய்துள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினர் சார்ந்த பயங்கரவ்திகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.