நடிகை வழக்கு: சீமான் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min read
Actress case: Seeman’s appeal to be heard in Supreme Court tomorrow
2.3.2025
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை போலீசார் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வருகிற 3ம் தேதி (நாளை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் 62வது வழக்காக விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது.