இங்கிலாந்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
1 min read
Khalistan supporters attempt to attack Union Minister Jaishankar in England
6.3.2025
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை துவக்கியுள்ளன. இந்த சூழலில் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர் இந்த ஆறு நாட்களில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியை அவரது இல்லத்தில் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இல்லத்தில் வெளியே குவிந்து இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் காரில் ஏறுவதற்காக ஜெய்சங்கர் வெளியே வந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அமைச்சர் முன்னிலையில் தேசியக் கொடியை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து வருகையின் போது பாதுகாப்பு மீறல்களை நாங்கள் பார்த்தோம். பயங்கரவாதிகளின் இந்த ஆத்திரமூட்டும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம்.
ஜனநாயக சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். பிரிட்டன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.