ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக எச்சரிக்கை?
1 min read
Edappadi Palaniswami’s indirect warning to Rajendra Balaji?
10/3/2025
தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக உரையாடி வருகிறார். திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாடினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘கட்சியின் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது. கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார் என பாண்டியராஜன் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான்” என்று பேசினார். மேலும் மாபா பாண்டியராஜனையும் கடுமையாக விமர்சித்தார்.
இதன்பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாண்டியராஜன் சந்தித்து பேசினார். கட்சி நிர்வாகிகள் மத்தியில், தன்னை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது குறித்து, அப்போது அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் மறைமுகமாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.