வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள்; இஸ்ரோ சாதனை
1 min read
ISRO hails successful separation of SpaceX spacecraft as milestone
13/3/2025
‘ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு, ‘இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள்’ என இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றது.
தொழில்நுட்ப பிரச்சனையால் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இது குறித்து வீடியோ வெளியிட்டு, இஸ்ரோ கூறியிருப்பதாவது:
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. சுற்றுப்பாதையில் இந்த வெற்றிகரமான பிரிவின் கண்கவர் காட்சிகளைப் பாருங்கள். இந்த மைல்கல்லை எட்டியதற்கு இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளது.