July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

லோகோ சர்ச்சை: இந்திய ரூபாய் இலட்சினை வடிவமைத்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன்

1 min read

Logo controversy: DMK former MLA’s son designs Indian rupee coin

14.3.2025-
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 2025-26 பட்ஜெட் லோகோ நேற்று வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியிடப்பட்ட லோகோவில் “ரூ” என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவில் பட்ஜெட் லோகோவாக “ரூ” இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீடியோவில் “ரூ” நீக்கப்பட்டு இந்திய ரூபாயை குறிக்கும் “₹” சின்னம் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் “₹” என்ற சின்னத்தை வடிவமைத்தவர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த “₹” ரூபாய் சின்னத்தை உதய குமார் தர்மலிங்கம் என்ற தமிழர் வடிவமைத்தார்.

தற்போது உதய குமார் தர்மலிங்கம் ஐ.ஐ.டி. கவுகாத்தியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை என். தர்மலிங்கம் அரசியல் பின்னணி கொண்டவர் ஆவார். மேலும், இவர்தமிழ்நாட்டின் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்திய ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் இந்தியாவை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள உதய குமார் இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் ஆவார். எனினும், மத்திய அரசு உதயகுமார் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் போட்டி நடத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான ‘₹’ ஐ நீக்கியுள்ளதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

திமுகவிற்கு உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது, இந்தச் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
‘₹’ – இந்தச் சின்னத்தை முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. என்.தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம் தி.மு.க. ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமின்றி, ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக ‘ரூபாய்’ அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

‘ரூபாய்’ என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.

ரூபாய் சின்னம் ‘₹’ என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும். இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.

இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல, இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது என பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.