அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
1 min read
388 Indians have been deported from the US so far
22.3.2025
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மெக்சிகோ, கனடா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி அவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் பலர் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய மந்திரி கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த பிப்ரவரி மாதம் 333 பேர் நேரடியாக 3 ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வணிக விமானங்கள் மூலம் பனாமா வழியாக 55 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் 295 இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.