அகமதாபாத்தில் இரும்பு பாலம் சரிந்து விபத்து-40ரெயில் சேவை பாதிப்பு
1 min read
Iron bridge collapses in Ahmedabad, 40 rail services affected
24.3.2025
அகமதாபாத் அருகே உள்ள புல்லட் ரெயில் திட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தது. பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரிவு இரும்பு பாலத்தை அமைக்க கிரேன் உதவியுடன் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அதன் நிலையிலிருந்து சறுக்கி அருகிலுள்ள ரெயில் பாதையை பாதித்தது, இந்த சம்பவத்தால் வத்வா மற்றும் அகமதாபாத் நிலையங்களுக்கு இடையிலான கீழ் பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் குறைந்தது 25 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 15 ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன, ஐந்து ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆறு ரெயில்கள் திருப்பி விடப்பட்டன என்று அகமதாபாத் ரெயில்வே பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து அருகிலுள்ள ரெயில் பாதையை பாதித்துள்ளது. காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை அதிகாரிகளுடன் சேர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கட்டப்பட்ட கட்டமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தால் அகமதாபாத்தில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஹம்சபர் எக்ஸ்பிரசின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராஜ்கோட்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் மற்றும் வேறு சில ரெயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விவரம் வருமாறு:-
வத்வா-போரிவலி எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், வதோதரா-வத்வா இன்டர்சிட்டி, அகமதாபாத்-வல்சாத் குஜராத் குயின், ஜாம்நகர்-வதோதரா இன்டர்சிட்டி, வத்நகர்-வல்சாத்-வத்நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் வத்வா-ஆனந்த் மெமு ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.