காற்று, சோலார் மின் உற்பத்தியில் ஜெர்மனியை முந்தியது இந்தியா!
1 min read
India overtakes Germany in wind and solar power generation!
8.4.2025
கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை முந்தி, உலகின் 3வது பெரிய நாடாக மாறியது.
புவி வெப்பமயமாதல், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம், சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.
அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்சார உற்பத்தியில், 41 சதவீத மின்சாரம் கடந்த ஆண்டு அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டது. 2024ல் இந்தியா காற்று மற்றும் சூரிய சக்தி மூலமாக 215 (TWH) டெராவாட் ஹவர்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்த உற்பத்தித்திறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிகவும் தாமதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும், அதிவேகத்தில் மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி வருகிறது. இதன் மூலம், உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது.
அதேநேரத்தில் முதல் இடத்தில் இருக்கும் சீனா 1,826 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும், 2வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 757 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும் உற்பத்தி செய்துள்ளன.கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 22 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்த எம்பர் எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குனர் மெக்டொனால்ட் கூறியதாவது: உலகளாவிய சூரிய மின் உற்பத்தி மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.