ரஜினியால் பதவி இழந்த ஆர்.எம்.வீரப்பன்; 30 ஆண்டுகளுக்குபிறகு மனம் திறந்த ரஜினி
1 min read
R.M. Veerappan, who lost his position to Rajini; Rajini opens up after 30 years
9.4.2025
பாட்ஷா பட வெற்றி விழாவில் என்ன நடந்தது? அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார்.
எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாள் இன்று. இதையடுத்து ஆர் எம்.வீ. தி கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது.
அதில் ஆர்.எம். வீரப்பன் பற்றிய கடந்த கால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறி இருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ரொம்ப நெருக்கமாக, எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அன்பாக இருந்தவர்கள் 3,4 பேர். இவர்கள் எல்லாம் இல்லை என்று சொல்லும் போது, அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்.
பாட்ஷா பட வெற்றி விழாவில், அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசினேன். அமைச்சரை மேடையில் வைத்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. அந்த அளவிற்கு அப்போது எனக்கு தெளிவு இல்லை. நான் அது பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தெரிந்த பிறகு, ஜெயலலிதா வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். அந்த தகவல் தெரிந்த பிறகு ஆடிபோனேன். என்னால் தான் இப்படி ஆகிவிட்டது என இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை.
ஆனால் ஆர்.எம்.வீரப்பன் அதனை விடுங்க, அதனை மனதில் வைத்து கொள்ள வேண்டாம் என்றார். எனக்கு வந்து அந்த தழும்பு எப்போதும் போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியாக பேசியது. நான் பேசிய பின்னாடி அவர் எப்படி மைக் பிடிச்சு பேசமுடியும். மதிப்புக்குரிய சி.எம். ஜெயலலிதாவை எதிர்க்கிறதுக்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட, இந்த காரணம் ரொம்ப முக்கியமானது.
அதற்கு அப்புறம் நான் அவர்கிட்ட போனில் சொல்லி இருந்தேன். நான் வேணா அவர்கிட்ட(ஜெயலலிதாவிடம்) பேசட்டா. இதைப் பத்தி சொல்லும் போது…அய்யய்யோ, வேணாம். வேணாம். அந்த அம்மா ஒரு முடிவு எடுத்த மாற்ற மாட்டாங்க. நீங்க பேசி உங்க மரியாதையை நீங்க இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லி நான் அங்கே போய் சேர வேண்டிய அவசியம் இல்லை. நீங்க விட்டுடுங்க. அந்த மாதிரி ஒரு பெரிய இனிய மனிதர், கிங் மேக்கர், ரியல் கிங்மேக்கர். இவ்வாறு ரஜினி கூறினார்.