July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டணி- அமித் ஷா பேட்டி

1 min read

Alliance led by Edappadi in Tamil Nadu – Amit Shah interview

11.4.2025
சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:-
அ.தி.மு.க., பா.ஜ., இணைந்து ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி செயல்படும். கூட்டணிக்கு அ.தி.மு.க., எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது இயல்பான இயற்கையான கூட்டணி. அ.தி.மு.க.,வின் தனிப்பட்ட பிரச்னைகளில் தலையிடப் போவது இல்லை. தேர்தல் விஷயங்கள் குறித்து இ.பி.எஸ்., தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம். கூட்டணி அமைவது, இருவருக்கும் பலனளிக்கக் கூடியது. யார் யாருக்கு எத்தனை தொகுதி குறித்து பிறகு முடிவு செய்வோம்.
ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழி, தொகுதி மறுவரையறை, சனாதன பிரச்னைகளை தி.மு.க., எழுப்புகிறது.வரும் தேர்தலில், தி.மு.க.,வின் மோசடி, ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசுபொருள் ஆக இருக்கும்.
டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளை மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. மின்சாரம், நிலக்கரியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியும், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாயும், பண மோசடி மூலம் ஆயிரம் கோடிக்கு மேலும் தமிழகத்தில் ஊழல் நடக்கிறது.
ஊட்டச்சத்துக்கு சாதனம் வாங்குவதில் ரூ.450 கோடி, செம்மண் கடத்தல், அரசு வேலைக்கு பணம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் என பல மோசடி நடக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்.
மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை தி.மு.க., பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட விவகாரத்தில் அ.தி.மு.க., உடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது செயல்திட்டம் உருவாக்கப்படும். தமிழக மக்களை சந்திக்கும்போது, அவர்கள் உண்மையாக சந்திக்கும் பிரச்னையை எடுத்து செல்வோம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்துவோம். தி.மு.க.,வை போன்று மடைமாற்றும் திட்டத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் கூட்டணி செயல்படும். தமிழ் மக்களையும், மாநிலத்தையும் கவுரவமாகவே கருதுகிறோம். தமிழகத்தை எப்போதும் பிரச்னைக்கு உரியதாக கருதியது இல்லை. மோடி, தமிழகம், தமிழ் கலாசாரத்தை மதித்து பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார். ஆனால், அதனை தி.மு.க., எதிர்த்தது. மோடி தான் தமிழின் பெருமையை போற்ற காசி தமிழ்சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தை நடத்தினார். தமிழகத்தில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை கேலோ விளையாட்டில் இணைத்தார்.

தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரே நிறுவனம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம். மத்திய அரசின் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பிரதமர். ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. திருக்குறளை உலகின் பல்வேறு நாட்டின் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறோம். இதுவரை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உள்ளோம். பாரதியின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டவர் பிரதமர். சிவில் சர்வீஸ் தேர்வுகள் தமிழில் எழுத முடிகிறது. ஆனால், மத்தியில் தி.மு.க., கூட்டணி ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய ஆயுத காவல்படை தேர்விலும் இந்த நிலை இருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுத முடிகிறது. தி.மு.க., கூட்டணி ஆட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடிந்தது. எங்கு எல்லாம் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்கள் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம், இந்த படிப்புக்கான தமிழ் பாடங்களை உருவாக்க வேண்டும் என கூறியும், அது நடக்கவில்லை.
தி.மு.க., இதுவரை தமிழ் தமிழ் என சொல்கிறார்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என மக்களிடம் பட்டியலிட முடியுமா? நீண்ட வலுவான உறுதியான கூட்டணி அமைப்பதற்காக தான் கூட்டணி அமைப்பது கால தாமதமானது.தமிழக மக்கள் ஏதும் அறியாதவர்களா? காங்கிரசின் நிலைப்பாடு என்ன எதை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்பதை அறிந்தவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையில், தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தேநீர் விருந்து அளித்தார். இதில், அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., சார்பில் வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.