ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
1 min read
Kadayam Police Inspector arrested for accepting a bribe of 30 thousand
12.4.2025
தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கையும் களவுமாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மேரி ஜெமீதா
தென்காசி காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பணகுடி பகுதியைச் சார்ந்த செல்வக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். அப்போது நீதிமன்றம் நிபந்தனையாக செல்வக்குமார் தினமும் கடையம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி செல்வகுமார் நாள்தோறும் கடையம் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வக்குமார் கடையம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் நீங்கள் காவல் ஆய்வாளரை ஒரு முறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அதன்படி செல்வக்குமார் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதாவை சந்தித்துள்ளார் அப்போது செல்வக்குமாரிடம் இந்த வழக்கு தொடர்பாக தினமும் கையெழுத்து போடுவதை முடித்து வைக்கவும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மீண்டும் செல்வக்குமாரிடம் ஒப்படைக்கவும் ரூ.30,000 லஞ்சமாக தரவேண்டும் என்று கூறி யுள்ளார்.
இதைக் கேட்ட செல்வக்குமார் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் இது பற்றி தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று புகார் தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த ரசாயனம் பூசிய ரூபாய் 30,000 கரன்சி நோட்டுக்களை பெற்றுக்கொண்டு ஆய்வாளர் மேரி ஜெமீதாவை சந்தித்து அந்தப் பணத்தை செல்வகுமார் காவல் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீசார் அதிரடியாக ஆய்வாளர் மேரி ஜெமீதாவை கையும் களவுமாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் மேரிஜெமீதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.