வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி கொலை
1 min read
Hindu religious leader kidnapped and murdered in Bangladesh
19.4.2025
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து வடமேற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாசுதேப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாபேஷ் சந்திரா ராய் (வயது 58). இந்து மதத்தின் பிரபல தலைவராக அறியப்பட்ட இவர், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றி ராயின் மனைவி சாந்தனா செய்தியாளர்களிடம் கூறும்போது, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா? என உறுதி செய்து கொள்வதற்காக இந்த அழைப்பு வந்தது என கூறியுள்ளார்.
இதன்பின்னர் அரை மணிநேரம் கழித்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், வீட்டில் இருந்த பாபேஷை கடத்தி சென்றனர் என்றார். இதன்பின்பு நரபாரி கிராமத்திற்கு கடத்தி செல்லப்பட்ட அவரை, அந்த 4 பேரும் அடித்து, தாக்கியுள்ளனர் என தி டெய்லி ஸ்டார் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த கொடூர தாக்குதலில், அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரை குடும்பத்தினர் தினாஜ்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார்.
அந்நாட்டில், இந்து மதத்தின் பிரபல நபராக அறியப்படுகிற பாபேஷ், வங்காளதேச பூஜா உத்ஜபன் பரிஷத் அமைப்பின் பிரல் பிரிவில் துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.