July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மன்னார்குடி காமராசர் பேருந்து நிலையம் பெயரை மாற்றுவதா? – சீமான் கண்டனம்

1 min read


Should the name of Mannargudi Kamaraj Bus Stand be changed? – Seeman condemns

20.4.2025
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசரின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத்தின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட தி.மு.க. அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடுவுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய தி.மு.க. அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழத்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க தி.மு.க. அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும்.

ஆகவே, மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.