சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
1 min read
Accumulation of assets case: Order to release Minister Durai Murugan revoked
23/4/2025
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பாய்ந்தது.
அவர்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு கடந்த 2007 ம் தேதி வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
துரைமுருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் சொத்துக்களையும் சேர்த்து தான் அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தவறான ஒன்றாகும் என்று வாதிட்டன. அதேபோல் அரசு தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கலான குற்றப்பத்திரிகை அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட்டு, தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.