பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அனைத்து முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்
1 min read
Amit Shah instructs all Chief Ministers to expel Pakistanis
25.4.2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
இதையடுத்து சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என தெரிவித்தது. மேலும் இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது.
இந்த சூழலில் நேற்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அதில், தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் காவல்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறிய இடத்திற்கு நடந்து அல்லது குதிரை மூலம் மட்டும் பயணம் செய்ய முடியும் என்பதால்தான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டதாக மத்திய மந்திரி அமித் ஷா விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பைசரனில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த தகவல் தொடர்பு சிக்னலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தீவிரவாதிகள் எந்த தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் அமித் ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.