நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் விவரம்
1 min read
Wartime drills across the country tomorrow: Details of key procedures to be followed
6.5.2025
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேவேளை, சில நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இதனிடையே பாகிஸ்தான் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி இந்தியாவை ஆத்திரமூட்டி வருகிறது. அந்த வரிசையில் நேற்று 120 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதித்தது. தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் ‘படா வரிசை’ ஏவுகணைகளை சோதித்தது.
‘சிந்து’ என்ற பெயரில் நடத்தி வரும் பயிற்சியின் ஒருபகுதியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது. வீரர்களின் தயார் நிலை, ஏவுகணைகளின் துல்லியம் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டதாக மேலும் தெரிவித்து உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் மந்திரிகள் சிலர் இந்தியாவை மிரட்டும் தொனியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஏவுகணை ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவும் அதற்கான எதிர்வினையாற்ற தயாராக உள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கும், இலக்குகளை தாக்குவதற்கும் முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் நேற்று சந்தித்தார்.
பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. அப்போது பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை பிரதமர் மோடி, தனது அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
அப்போது மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் வருமாறு:-
எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை செய்யப்பட வேண்டும்
முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல். இந்தப பயிற்சி கிராம மட்டம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டக் கட்டுப்பாட்டாளர்கள், உள்ளூர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர் (செயலில் உள்ளவர்கள் மற்றும் ரிசர்வ் வீரர்கள்), தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS), நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இந்தப் பயிற்சியில் தீவிரமாகப் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது “
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.