அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
1 min read
2 lakh students apply for government arts colleges
24.5.2025
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வமாக உள்ளனர். 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 8-ந்தேதி தொடங்கியது.
ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டப்படிப்புகளில் சேர்ந்து போட்டித் தேர்வு மூலம் அரசு பணியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக வேகமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய தள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வளைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044- 24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.