என்னிடம் வெள்ளைக்கொடி இல்லை-ஸ்டாலின் பேட்டி
1 min read
I don’t have a white flag or a saffron flag – Stalin interview
24/5/2025
” பள்ளி கல்வித்துறைக்கான நிதி, கோவை, மதுரை மெட்ரோ, கோவை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்”, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
*பள்ளி கல்வித்துறைக்கான எஸ்எஸ்ஏ நிதியை பெறுவது
- மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்,
- அந்த நகரங்களில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம்,
*சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பது,
*செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றுவது,
- கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை
- கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிட மக்களை ஆதி திராவிடர் பட்டியலில் சேர்ப்பது
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினேன்.
நிடி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். இதனை ஏற்று 2 நிமிடங்கள் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் இந்த கோரிக்கையை அளித்தேன்.
இதனை செய்வேன் என சொன்னார். செய்வாரா மாட்டாரா என்பது போகப்போக தெரியும். தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வர வேண்டிய நிறுத்தி வைத்தனர். அதனை , பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய பிறகு நிதியை விடுவித்தார். இதனை நினைவுபடுத்தி நன்றி தெரிவித்த போது, நீங்கள் சொன்னீர்கள். அதை செய்தேன் எனக்கூறினார். அதை போன்று இதை கூறியுள்ளேன். அதனை செய்யுங்கள் எனக்கூறினேன். தமிழகத்திற்கான கல்வி நிதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.
சோனியா, ராகுலை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. டில்லி வரும்போது எல்லாம் அவர்களை சந்திப்பது வழக்கம். அதேநேரத்தில் அரசியல் பேசவில்லை எனக்கூற மாட்டேன்.
அமலாக்கத்துறை தொடர்பான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்து நியாயமானது. நியாயமான தீர்ப்பை கூறியுள்ளார். அமலாக்கத்துறை சோதனை அரசியல் ரீதியானது அதனை முறைப்படி சந்திப்போம்.
நான் வெள்ளைக்கொடி காட்டுவதாக அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறுகிறார். அவர் போன்று என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவிக் கொடியும் இல்லை.
டாஸ்மாக் மற்றும் குவாரி ஊழல் நடந்ததாக இடி கூறுவது பொய். பித்தலாட்டம். தேவையில்லாம பிரசாரம் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுத்து உள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க இதனை செய்கின்றனர். அதனை சமாளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.