குஜராத்தில் ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
1 min read
PM Modi inaugurates rail locomotive manufacturing plant in Gujarat
26/5/2025-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
2 நாட்கள் பயணத்தில் அவர் ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று காலை தாஹோத் நகரில் ரெயில் என்ஜின் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த தொழிற்சாலை உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் 9 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட மின்சார ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும். இந்த தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரெயில் என்ஜினையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வேயின் சரக்கு ஏற்றுதல் திறனை அதிகரிக்க இந்த ரெயில் என்ஜின்கள் உதவும்.
அதை தொடர்ந்து தாஹோத் பகுதியில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் நிறைவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இவற்றில் ரெயில்வே திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களும் அடங்கும். வேராவல்-அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலையும், வல்சாத்-தாஹோத் இடையே விரைவு ரெயிலையும் அவர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் திறந்து வைத்ததோடு அதில் ஒரு சரக்கு ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பூஜ் நகருக்கு சென்றார். அங்கு ரூ.53,400 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நிறை வடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காந்தி நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 22 ஆயி ரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.