July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 53 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தீவிரம்

1 min read

Southwest monsoon intensifies in Tamil Nadu after 53 years

26.5.2025
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பில்லூர் அணையில் நேற்று திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

இன்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமென கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அடிக்கடி உள்ளது இதனால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் இதனால் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் குற்றாலத்தில் அனைத்து அறிவிப்பகுதிகளிலும் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது.

ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும்.

இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும்.

அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.