சபரிமலை பக்தர்களுக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை
1 min read
A modern specialized hospital in Nilakkal for the convenience of devotees visiting Sabarimala
27.5.2025
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
யாத்திரை காலத்தில் சபரிமலை வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு மருத்துவ சேவை வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 3 மாடி கட்டிடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆய்வு அமைப்புகளுடன் மருத்துவமனை கடடப்படுகிறது. அதற்காக பட்ஜெட்டில் ரூ.9 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையின் தரை தளத்தில் 12 படுக்கைகள் கொண்ட விபத்து பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, 7 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு வார்டு, வரவேற்பு அறை, ஆய்வகம், மாதிரி சேகரிப்பு மையம், மருந்தகம், காவல் உதவி மையம் உள்ளிட்டைகள் இருக்கும்.
அதேபோல் முதல் தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்ரே அறை, 13 படுக்கைகள் கொண்ட பொது வார்டு, மருத்துவர்கள் மற்றும் செலிவிலியர்கள் அறை, ஒரு மாநாட்டு மண்டபம் மற்றும் அலுவலகங்கள், மேல் தளத்தில் 50 படுக்கைள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும். இந்த மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.