நீதிமன்ற நடவடிக்கைக்கும் “ஸ்டிக்கர்”- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு
1 min read
Sticker for court action – Edappadi Palaniswami attacks M.K. Stalin
28.5.2025
சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி.
போலீசாரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்.
எதிர்க்கட்சியினரை விமர்சித்துள்ள முதல் அமைச்சருக்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?
அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?
உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா?
அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய எஸ்.ஐ.டி விசாரணையை நீங்கள் இன்ப்பிலுயன்ஸ் (Influence) செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்-அமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன்.
“சார்”-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் – பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி!
இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அஇஅதிமுக ஆட்சி அமையும்!
அந்த “சார்”-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.