அ.தி.மு.க. கவுசிலர் கன்னத்தில் பெண் கவுன்சிலர் அடித்ததகால் கைகலப்பு – 13 மீது வழக்குப்பதிவு
1 min read
Brawl at Salem Corporation meeting – Case registered against 13 councilors
31/5/2025
சேலம் மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோட்டத்தின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது அ,தி,மு,க, மாமன்றக் குழு தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி என்பவர் எழுந்து பேச முயன்றார். அதேநேரத்தில் தி.மு.க., கவுன்சிலரான சுகாசினி என்பவர் குறுக்கிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் சுகாசினி, யாதவ் மூர்த்தியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மற்ற உறுப்பினர்கள் வந்து அவர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பும் கைகலப்பும் ஏற்பட்டது இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் திடீரென மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மாநகராட்சி டெண்டர்களை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே எடுப்பதாக கவுன்சிலர் யாதவமூர்த்தி குற்றம் சாட்டிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் அவரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் போலீசாரின் பேச்சு வார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் 8 கவுன்சிலர்கள் மீதும், திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் 5 கவுன்சிலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.