பிரம்மபுத்திரா நதியை சீனா நிறுத்தினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
1 min read
Even if China blocks the Brahmaputra River, India will not be affected
3/6/2025
காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுக்க ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரிவித்தார்.
இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் தண்ணீரை சீனா நிறுத்தினால் என்ன செய்வது என்று அச்சுறுத்தி உள்ளது. பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி இந்தியா மேல் நீரோட்டத்தை சார்ந்துள்ளது. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு. இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது. சீனா நீர் ஓட்டத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை. ஒருவேளை நீர் ஓட்டத்தை சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க உதவக்கூடும்” என்று கூறினார்.